Posted by : Author
Friday, 31 July 2015

ஒருவருக்கு சிறுநீரகத்தில் கல் ஏற்பட்டுவிட்டால், கீழ் வயிற்றில் அதீதமான வயிற்றுவலி ஏற்படும். முதுகுப் பகுதியில், சிறுநீரக மண்டலத்தில் வலி அதிகமாக இருக்கும். சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல், ரத்தம் கலந்து வருதல் ஆகிய பிரச்சினைகள் இருக்கும். சிறுநீரகக் கல் இருப்பதைக் கண்டறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே பரிசோதனைகள் போதுமானவை.
இதற்கு என்னதான் சிகிச்சை?
சிறுநீரகத்தில், சிறுநீர்ப் பையில், சிறுநீரகக் குழாயில் எங்கே கல் உள்ளது என்று கண்டறிந்துவிட்டால், என்ன மாதிரியான சிகிச்சை அளிக்கலாம் என்பதை முடிவு செய்துவிடலாம். சுமார் 5 மி.மீ. வரை அளவுள்ள கற்களை, மருந்து, மாத்திரைகள் மூலமாகவே கரைத்துவிடலாம். பெரிய கற்களுக்கு வேறு மாதிரியான சிகிச்சைகள் உள்ளன.
வெளியில் இருந்து ஒலி அலைகள் மூலம் கல் உடைக்கும் முறை: (Extracorporeal shock wave lithotripsy)
இந்த முறையில் வெளியில் இருந்து அல்ட்ரா சவுண்ட் செலுத்தப்பட்டு கல் உடைக்கப்படும். 1 முதல் 1.5 செ.மீ. வரை அளவுள்ள கற்களை இந்த முறையில் அகற்றலாம். ஆனால், கல் உடைக்கப்படும்போது அதன் சிதறல்கள் வேறு எங்கேனும் சிக்கிக்கொள்ளும் ஆபத்து இதில் உண்டு.
துளை மூலம் சிறுநீரகத்தில் கல் அகற்றும் அறுவைச் சிகிச்சை: (Percutaneous Nephro Lithotripsy)
ஒருகாலத்தில் பெரிய சிறுநீரகக் கற்களை அகற்ற திறந்த அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. இதற்கு மாற்றாக வந்தது தான் இந்த முறை. முதுகில் சிறிய துளை போட்டு, 1.2 செ.மீ. அளவுக்கு மேல் உள்ள கற்களை வெளியே எடுக்கும் முறை இது.
பிறப்பு உறுப்பு வழியே கற்களை அகற்றும் முறை (Retrograde intrarenal surgery):
எந்த அறுவைச் சிகிச்சையும் இன்றி, பிறப்பு உறுப்பு வழியாக குழாய் போன்ற கருவியைச் செலுத்தி லேசர் கற்றைகள் மூலம் கற்களை உடைத்து வெளியே எடுக்கும் முறை இது. மெல்லிய டெலஸ்கோப் துணையுடன் சிறுநீரகத்தின் உள் அமைப்பைக் கணினியில் பார்த்துக்கொண்டே செய்யப்படும் சிகிச்சை இது என்பதால், துல்லியமான சிகிச்சை உத்தரவாதம். நோயாளிக்குத் துளி ரத்தச் சேதம்கூட இந்த முறையில் ஏற்படாது என்பது கூடுதல் நன்மை.
சிறுநீரகக் கற்கள் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
தினமும் குறைந்தது இரண்டரை முதல் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். அதிக நீர்ச் சத்து நிறைந்த காய்கறி, பழங்களைச் சாப்பிட வேண்டும். கல்சியம் ஆக்சலேட், கல்சியம் பாஸ்பேட் ஆகிய உப்புக்கள்தான் சிறுநீரகக் கற்கள் உருவாக முக்கியக் காரணங்கள். எனவே, இவை உருவாக அதிக வாய்ப்புள்ள மாட்டிறைச்சி மற்றும் ஆட்டிறைச்சியைக் கூடுமானவரை தவிர்க்கலாம்.
சிறுநீரகக் கல் வந்துவிட்டால், என்ன செய்ய வேண்டும்?
உணவில் உப்பைக் குறைக்க வேண்டும். பழச்சாறு, இளநீர், வாழைத்தண்டு சாறு அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். வாழைத்தண்டு சாறில் நார்ச் சத்தும் அதிக அளவில் உடலுக்குத் தேவையான தாது உப்புக்களும் உள்ளன. இவை சிறுநீர் கழிப்பைத் தூண்டும். இதனால், சிறிய சிறிய கற்கள் எல்லாம் வெளியே தள்ளப்படும். எலுமிச்சை, ஆரஞ்சு போன்ற சிட்ரிக் அமிலப் பழங்களின் ஜூஸ் குடிப்பதன் மூலம், அது சிறுநீரில் அமிலத் தன்மையைக் குறைத்து கல் உருவாவதைத் தடுக்கும். ஒருவருக்கு ஒரு முறை சிறுநீரகக் கற்களை அகற்றிவிட்டாலும் அடுத்த ஐந்து வருடங்களில் திரும்ப வருவதற்கு 50 சதவிகித வாய்ப்பு உண்டு. அதனால், அவர்கள் கூடுதல் எச்சரிக்கையோடு இருத்தல் நலம்!
Related Posts :
- Back to Home »
- சிறு நீரகம். »
- சிறுநீரகக் கற்கள் உருவாவதை எப்படி தெரிந்துகொள்வது?

