Posted by : Admin Sunday, 3 November 2013

வீட்டையையும் பார்த்துக் கொண்டு, வேலைக்கும் சென்று வரும் இயந்திர கதியான வாழ்க்கை முறை காரணமாக, பெண்களால் உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கிய முயற்சிகள் போன்றவற்றில் சரிவர ஈடுபட முடிவதில்லை. அதற்கு காரணம் எதுவாக இருந்தாலும், புலம்பிக் கொண்டே இருப்பதில் ஒரு பயனும் இருக்கப் போவதில்லை. 


இவர்கள் தங்கள் வேலை, வீட்டுப் பொறுப்பு போன்றவற்றோடு தங்களது சொந்த ஆரோக்கியத்திற்கும் சற்று கூடுதல் கவனம் மற்றும் அக்கறை எடுத்துக் கொண்டால் ஒழிய நிலைமை மாறப் போவதில்லை. வேலைக்கு போகும் பெண்கள் பின்பற்ற வேண்டிய ஆரோக்கிய குறிப்புகளை பார்க்கலாம்..

• செல்போன் உரையாடல்களை நடந்தபடியே தொடருங்கள். ‘ஹேன்ட்ஸ்ஃப்ரீ' வசதி இருப்பது இதற்குத்தான். மேலும், மீட்டிங்குகளில் நின்று கொண்டோ அல்லது டைப் பண்ண வேண்டிய தேவை இல்லாத போது நின்றபடி வேலையில் ஈடுபடவோ செய்யலாம். அது உடலை நீண்ட நேரம் ஒரே நிலையில் வைத்திராமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

• உங்களுக்கு பொருந்தக்கூடிய சில உடற்பயிற்சிகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். உதாரணமாக, வாரத்திற்கு இரண்டு முறை 20 நிமிடங்களுக்கு தசை வலுவூட்டும் பயிற்சிகள் சிலவற்றை செய்வது நல்லது அல்லது இடைவேளைப் பயிற்சியாக நடைப்பயிற்சி அல்லது மெது ஓட்டம் போன்றவற்றை மேற்கொள்ளலாம். இவை உடல் ஆரோக்கியத்திற்கும், உடற்கட்டுக்கும் புதுப்பொலிவை அளிக்கும்.

• வேலைக்கு போகும் பெண்களின் ஆரோக்கியத்தை பேணுவதில் உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி ஆகிய இரண்டும் முக்கிய பங்கு வகிக்கின்றன. காலை உணவில் புதிதான பழ வகைகளை சேர்த்துக் கொள்வது சிறந்தது. இதனால் பழங்களில் உள்ள குளுக்கோஸ் உடலின் இனிப்பு வேட்கையை பூர்த்தி செய்துவிடும். முடிந்த வரை காலை உணவை தவிர்க்க கூடாது.

• உடல் ஆரோக்கியத்திற்கும், சீரான இயக்கத்திற்கும் நீர் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது. எனவே அன்றாடம் குறிப்பிட்ட இடைவேளைகளில் நீர் அருந்தும் வழக்கத்தை கடைப்பிடிப்பது அவசியம். இது உடலில் நீர்ச்சத்து குறைந்து போகாமல் தடுக்கும். மேலும் தினமும் 3 லிட்டா தண்ணீர் குடிக்க வேண்டியது முக்கியம். இதனால் உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகள் வெளியேறும்.

• மாவுப்பொருள் கொண்டு தயாரிக்கப்படும் பிஸ்கட், இனிப்பு ரொட்டிகள் போன்றவற்றையும், தேன் மற்றும் சாக்லெட்டுகள் போன்றவற்றையும், அதிக அரிசி உணவையும் தவிர்த்திடுங்கள். இவை இரத்த சர்க்கரை அளவை திடீரென்று அதிகரிக்கும் தன்மை கொண்டவை என்பதோடு, இன்சுலின் சுரப்பை தூண்டிவிட்டு, உடலில் கொழுப்பையும் சேர்த்துவிடக்கூடும்.

• பெண்களை பொறுத்தவரையில் ஒரு மணிநேர உடற்பயிற்சி செய்முறைகள் போதுமானது. எனவே அதிக நேரம் ஜிம்மில் உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது களைப்பையும், சோர்வையும் ஏற்படுத்திவிடும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -