Posted by : Author Thursday, 27 October 2016


ஞாபக சக்தியை பெருக்கும் வல்லாரை கீரை அன்னை சரஸ்வதியின் சாராம்சம் பொருந்திய மூலிகையாக கருதப்படுகிறது.

வல்லாரைக் கீரையில் சுண்ணாம்புச்சத்து, இரும்புச்சத்து, விட்டமின் A, C மற்றும் தாது உப்புக்கள் போன்றவை ஏராளமாக நிறைந்துள்ளது.

இந்தக் கீரையில் ரத்தத்திற்கு தேவையான சத்துக்கள் மற்றும் மூளையை நன்றாக செயல்பட வைக்கும் ஊட்டச்சத்துக்களும் சரிவித அளவில் உள்ளது.

எனவே வல்லாரைக் கீரை நமது உடம்பில் ஏற்படும் பலவிதமான பிரச்சனைகளை தீர்த்து வைக்க பயன்படுகிறது.

மனநோய்

அதிகாலையில் எழுந்து, மூன்று வல்லாரை இலைகளைப் பச்சையாக சாப்பிட்ட பின் நான்கு மணி நேரம் எதுவும் சாப்பிடாமல் இருக்க வேண்டும்.

பின் நன்றாக பசிக்கும் போது, அரை லிட்டர் பசும்பால் குடிக்க வேண்டும்.

உப்பு மற்றும் புளி அதிகம் இல்லாத உணவு வகைகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், மென்மையான உணர்வுகள் ஏற்படும். இதனால் மன நோய் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கும்.

இதயநோய்

வல்லாரை இலைகள் மூன்று, அக்ரோட் பருப்பு ஒன்று, பாதாம் பருப்பு ஒன்று, ஏலக்காய் ஒன்று, மிளகு மூன்று, கற்கண்டு பத்து கிராம் ஆகியவற்றை சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதை பாலில் கலந்து காலை மற்றும் மாலை தொடர்ந்து 21 நாட்கள் சாப்பிட்டு வர வேண்டும். இதனால் இதயம் தொடர்பான எந்த பிரச்சனைகளும் வராமல் தடுக்கிறது.

படைகள் மற்றும் அரிப்பு

கால் கிலோ புழுங்கல் அரிசியை ஊற வைத்து வடித்து, அதனுடன் ஒரு கைப்பிடி அளவு வல்லாரை இலைகள், ஐந்து மிளகு ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் அதனுடன் தேவையான அளவு சின்ன வெங்காயம் சேர்த்து, அந்த மாவில் ரொட்டி போல் செய்து சாப்பிட்டு வந்தால் படை, நமைச்சல், தோல் நோய்கள், அரிப்புகள் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்துகிறது.

ஞாபகசக்தி

வல்லாரை இலையைக் காயவைத்து அரை கிலோ அளவில் எடுத்துக் கொள்ளவும். இத்துடன் 50 கிராம் சீரகம், ஐந்து கிராம் மஞ்சள் சேர்த்துத் தூள் செய்து சலித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் இதை காலை, மாலை என்று உணவுக்கு முன் இரண்டு கிராம் அளவில் சாப்பிட்டு, சூடான பசும்பாலைக் குடித்து வந்தால், அறிவு மேம்பட்டு, நினைவாற்றல் அதிகரிக்கும்.

வலிப்பு நோய்

அரை லிட்டர் வல்லாரை இலைச்சாற்றில் கால் கிலோ வாய்விளங்கத்தை ஊறவைத்து, அதை வெயிலில் உலர்த்தவும். இதனைத் தூள் செய்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் இதை இருவேளைகள் ஒரு கிராம் அளவில் சாப்பிட்டு வந்தால், வலிப்பு வயிற்றுப் பூச்சிகள், கிருமிக் கோளாறுகள் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கிறது.

கபம் மற்றும் இருமல்

வல்லாரை இலையின் சாறு எடுத்து, அரிசித் திப்பிலியை அதில் ஊறவைத்து , பின் அதை உலர்த்தித் தூள் செய்து கொள்ள வேண்டும்.

இந்த தூளை நான்கு சிட்டிகை அளவு எடுத்து தேனில் குழைத்து தினமும் இருவேளைகள் சாப்பிட்டு வந்தால் நாள்பட்ட கபநோய்கள், இரைப்பு மற்றும் இருமல் போன்ற பிரச்சனைகள் வராமல் தடுக்கும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -