Posted by : Author Tuesday, 22 December 2015


நம் உடல் ஆரோக்கியமாக இருப்பதற்கும், உடல் உறுப்புக்கள் நல்ல முறையில் செயல்படவும் வைட்டமின்கள், தாது உப்புக்கள் தேவை.
அதேபோல், உடல் செயல்பாட்டின்போது, சுரக்கும் சில ரசாயனங்களால், செல்கள், டி.என்.ஏ. மூலக்கூறுகள் போன்றவற்றில் பாதிப்பு ஏற்படும். இந்தபாதிப்பைக் குறைக்க ஆன்டிஆக்சிடன்ட்கள் தேவை.

'நாம் சாப்பிடும் உணவிலேயே ஆன்டிஆக்சிடன்ட்கள் அதிகம் உள்ளன. எந்தெந்த உணவுப் பொருட்களில் இவை நிறைவாக உள்ளது என்பதை தெரிந்து, அவற்றைச் சாப்பிடும்போது, பாதிப்பில் இருந்து தப்பிக்கலாம்.

மாதுளம் பழம்:
பாலிபீனால் ஆன்டிஆக்சிடன்ட் இதில் அதிகம் உள்ளது. இதனால் மாதுளையை ஆன்டிஆக்சிடன்ட் 'பவர் ஹவுஸ்’ என்போம். இந்த ஆன்டிஆக்சிடன்ட், சூரியக் கதிர் வீச்சால் ஏற்படக்கூடிய பாதிப்புகள், திசுக்களில் வீக்கத்தைத் தவிர்த்து முதுமையைத் தாமதப்படுத்துகிறது. மாதுளம் பழத்தைத் தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு இதய நோய்க்கான வாய்ப்பும், ப்ராஸ்டேட் புற்றுநோய்க்கான வாய்ப்பும் குறைகிறது. ரத்த அழுத்தத்தைச் சீராகப் பராமரிக்கிறது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைரஸ் கிருமிகளுக்கு எதிராக செயல்படும்.

இந்தப் பழத்தில் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட தாது உப்புக்களும், வைட்டமின்களும் அடங்கியுள்ளன. பழத்தின் தோல் மற்றும் பட்டையில் அல்கலாய்டு, டேனின் உள்ளதால் இதனையும் பயன்படுத்தலாம்.

பப்பாளிப் பழம்:
மற்ற எல்லாப் பழங்களுடன் ஒப்பிடுகையில் பப்பாளியில்தான் அதிக அளவிலான சத்துக்கள் நிறைந்துள்ளன. வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம். இதில் வைட்டமின் ஏ, சி, தாது உப்புக்களில் இரும்பு, ஃபோலிக் அமிலம், பொட்டாஷியம், தாமிரம், பாஸ்பரஸ் மற்றும் நார்ச்சத்துக்களும், மிகக் குறைந்த கலோரியும் உள்ளன. இயற்கையாகவே விஷக் கிருமிகளை அழிக்கும் சக்தி பப்பாளிப் பழத்தில் உள்ளது. உடலின் மெட்டபாலிசத்தை இயற்கையான முறையில் ஊக்குவிக்கும். கொலஸ்டராலைக் குறைக்க உதவுகிறது. உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்கள் இந்தப் பழத்தை சாப்பிடலாம். நல்ல செரிமானத்தைக் கொடுக்கும். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இந்தப் பழத்தைத் தொடர்ந்து உட்கொள்வது நல்லது.

எலுமிச்சம்பழம்:
இதில் உள்ள ஆன்டிஆக்சிடன்ட்கள் நம் உடலில் உள்ள இறந்த செல்களை அகற்றுவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்தப் பழத்தில் அதிக அளவு 'பெக்டின் ஃபைபர்’ இருப்பதால், பசியைப் போக்கும். இன்சுலின் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கும். கலோரிகளை எரித்து உடல் எடையைக் குறைக்க உதவிடும். புண்களைக் குணப்படுத்தவும், இணைப்புத் தசைகளை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளவும் உதவும். மன வலிமையை ஊக்கப்படுத்தி மன அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் எலுமிச்சைக்கு உண்டு. விஷத்தை முறிக்கும் ஆற்றல்கொண்ட இது கிருமிகளுக்கு எதிராகச் செயல்பட்டு நோய் வராமல் தடுக்கும்.

ஸ்ட்ராபெர்ரி:
ஸ்ட்ராபெர்ரி பழத்தில் உள்ள ஃபிளவனாய்டு என்ற வேதிப்பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுகிறது. மேலும் ஃபிளவனாய்டு, நினைவாற்றலை மேம்படுத்தவும் உதவுகிறது. ஸ்ட்ராபெர்ரியில் வைட்டமின் ஏ, பி, சி, கே, ஃபோலிக் அமிலம் மற்றும் தாமிரம், மாங்கனீசு, அயோடின், பாஸ்பரஸ், மக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம், செலினியம் போன்ற தாது உப்புகளும் நிறைவாக உள்ளன.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -