Posted by : Author
Wednesday, 7 October 2015
தமிழ்த் திரைப்படமொன்றில் இடம்பெற்ற பாடலின் இடைவரிகள் பின்வருமாறு அமைகின்றன. “காட்டு விலங்கு எல்லாம் கொழுத்தால்தான் மதிப்பு, சாமி, துறவி எல்லாம் மெலிந்தால்தான் மதிப்பு” என ஒலிக்கும் அப்பாடல் வரிகள், உலக வாழ்வியலில் மதிப்பினைப் பெறுவதற்கு ஒவ்வொன்றிற்கும் என்னென்ன தகைமைகள் இருக்கவேண்டும் எனச் சுட்டிக்காட்டுகின்றன.
காட்டில் உணவிற்காக வேட்டையாடப்படும் விலங்கு கொழுத்து இருந்தால் அதிக இறைச்சி கிடைக்குமே என்ற உலகின் எதிர்பார்ப்பினையே தரப்பட்ட பாடல்வரிகளின் முதல் வரி குறிப்பிடுகின்றது.
தற்போது உணவிற்காக காட்டு விலங்குகள் வேட்டையாடப்படுவது சட்டத்தால் தடுக்கப்பட்டுள்ளதால், விலங்கு வேளாண்மையாக கோழி, மாடு மற்றும் பல விலங்குகள் வளர்க்கப்பட்டு, அவற்றினைக் கொன்று இறைச்சியினைப் பெறும் நடைமுறை தற்போது காணப்படுகின்றது.
இவ்வாறாக வளர்க்கப்படும் விலங்குகளை கொழுக்க வைப்பதற்காக சிறப்புத் தீவனங்களும் அவ்விலங்குகளுக்கு வழங்கப்படுகின்றன.
மனிதருக்கு நோய்கள் வருவதுபோல விலங்குகளுக்கும் எதிர்பாராத நோய்கள் ஏற்பட்டு அவை இறந்து விட்டால், அது விலங்கு வேளாண்மையாளருக்கு பாரிய நட்டத்தினை விளைவித்துவிடும். இதற்காக மிருக வைத்தியரின் பரிந்துரையுடனான மருத்துவப் பராமரிப்புக்கள் பண்ணைகளில் மேற்கொள்ளப்படுவது அவசியம். அதன் பின்னர், வழங்கப்பட்ட மருந்துகளின் தாக்கம் அகன்ற பின்னரே பெறப்படும் விலங்கு உணவுகள் நுகர்விற்கு அனுமதிக்கப்படவேண்டும்.
இலாபத்தினை மாத்திரம் நோக்காகக் கொள்ளும் விரைவான வர்த்தக உலகில் இந்த விடயங்கள் தொடர்பாக உணவகங்களின் கொள்கைகள் எவ்வாறுள்ளன என்பது குறித்து ஓர் ஆய்வு அமெரிக்காவில் நடத்தப்பட்டது.
இதில், அமெரிக்காவின் இயற்கை வள பாதுகாப்புப் பேரவை, பூமியின் நண்பர்கள் நிறுவனம், நுகர்வோர் அமைப்புக்கள், பொதுச் சுகாதார கண்காணிப்பகங்கள் என 7 நிறுவனங்கள் இணைந்து பணியாற்றின. அமெரிக்காவில் பிரபலமான, அசைவ உணவுகளை வழங்கும் 25 விரைவு உணவகங்கள் இந்த ஆய்விற்கு உட்படுத்தப்பட்டன.
இந்த ஆய்வின் பிரகாரம் இரு விரைவு உணவகங்கள் மாத்திரம் விலங்குகளுக்கான நுண்ணுயிர்க்கொல்லிகள் தொடர்பாக இறுக்கமான படிநிலைகளைக் கடைப்பிடிப்பது அவதானிக்கப்பட்டு உயர்தர (A) நிலையை அடைந்துள்ளன.
அசைவ உணவுகளை விற்பனை செய்யும் 20 உணவகங்கள் ஆய்வில் புள்ளியிடலில் கடைநிலையைப் (F) பெற்றுள்ளன. கடைநிலை தரத்தில், இங்கு பிரபலமாக இயங்கும் பல்தேசிய விரைவு உணவகங்கள் சிலவற்றின் பெயர்களும் உள்ளடங்கியுள்ளன என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் நுண்ணுயிர்க்கொல்லிகள் கண்டுபிடிக்கப்படாதிருந்த வேளையில், நுண்ணுயிர்களின் தாக்கத்தினால் மனிதர்கள் கொத்துக் கொத்தாக இறக்கவேண்டிய நிலை இருந்தது.
தற்போதுள்ள மனிதருக்கான மருத்துவ சிகிச்சைகளில், உரிய பிரமாணங்களில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நுண்ணுயிர்க்கொல்லிகள் வழங்கப்படாதுவிடின், குறிப்பிட்ட நுண்ணுயிரிகள் வீரியம் கொள்வதற்கு சந்தர்ப்பம் ஏற்படுகின்றது.
மேலும், நுண்ணுயிர்களின் சந்ததிகள் இக்கொல்லிகளுக்கு எதிராகக் கூர்ப்பு அடையும் பட்சத்தில் நுண்ணுயிர்க்கொல்லிகள் பயனற்றவையாக மாறிவிடக்கூடும்.
ஆனால், விலங்கு வேளாண்மையில் வளர்ப்பு விலங்குகளின் இழப்பினைத் தடுப்பதற்காக நுண்ணுயிர்க்கொல்லிகள் உரிய பிரமாணங்களின்றி, கட்டுப்பாடற்ற வகையில் பிரயோகிக்கப்படுவது இடம்பெறுவதைக் காணக்கூடியதாகவுள்ளது.
இவ்வாறான பிரயோகங்கள் காரணமாக, பண்ணையில் இருந்து பெறப்படும் விலங்கு உணவுகளை மனிதர் நுகருகையில், அந்த நுண்ணுயிர்க்கொல்லிகளும் மனிதரை வந்தடைகின்றன.
இவ்வாறு வந்தடையும் குறைந்த செறிவான நுண்ணுயிர்க்கொல்லிகள் காரணமாக, மனிதரைத் தாக்கும் நுண்ணங்கிகள் கூர்ப்பினூடாக வீரியமடைவதற்கான சந்தர்ப்பத்தினை வழங்குவதாக இந்நிலைமை அமைகின்றது. அவ்வாறு கூர்ப்படைந்தால், தற்போதுள்ள நுண்ணுயிர்க்கொல்லிகளின் பிரயோகம் பயனற்றதாக மாறி பாரிய உயிரிழப்புகளுக்கு வழிவகுக்கும் என அஞ்சப்படுகின்றது. பகட்டாகத் தோற்றும் உணவகங்களில் பலவற்றில் இவ்விடயம் குறித்து அக்கறை இல்லாமலிருப்பது கவலைக்குரியது.
ஆய்வுகளின் பிரகாரம் Panera மற்றும் Chipotle ஆகிய உணவகங்கள் மாத்திரம் A தரச் சித்தியையும், Chick-fil- A உணவகம் B தரச் சித்தியையும் பெற்றுள்ளன உணவகமான Chipotle இல் பரிமாறப்படும் இறைச்சி வகைகளில் 90 சதவீதமானவை நுண்ணுயிர்க்கொல்லிகள் அற்றவை என்பதை இவ்வுணவகம் உறுதிப்படுத்தியுள்ளது.
மற்றைய உணவகமான Panera கோழி மற்றும் பன்றி இறைச்சிகளை 100 சதவீதம் நுண்ணுயிர்க்கொல்லி இன்றி வழங்கிவரும் அதேவேளை, மாட்டிறைச்சி அவ்வாறில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் 2019 ஆண்டிலிருந்து 100 சதவீத நுண்ணுயிர்க்கொல்லியற்ற விலங்கு உணவுகளை வழங்க Chick–fil–Aஉணவகம் நடவடிக்கை எடுத்துவருவதும் அவதானிக்கப்பட்டுள்ளது.
ஏனைய 20 உணவகங்களும் பண்ணைகளிலிருந்து பெறப்படும் விலங்கு உணவுகளின் தரம் தொடர்பாக அதிக அக்கறைகளோ அல்லாவிடின் கொள்கைகளோ இல்லாமையால், சித்தியின்மை( F) என அவைகள் தரப்படுத்தப்பட்டுள்ளன.
மனித குலத்தினை மாபெரும் இக்கட்டிற்கு அழைத்துச் செல்லவல்ல இந்நிலைமை குறித்து அனைவரும் விழிப்படைவது அவசியம். விலங்குப் பண்ணைகளின் நுண்ணுயிர்க்கொல்லிப் பாவனை தொடர்பில் அக்கறை கொள்ளாத உணவகங்களை நுகர்வோர் புறக்கணித்து, விலங்குப் பண்ணைகளின் மருத்துவ நடைமுறைகளில் இறுக்கமான ஒழுங்கினைக் கடைப்பிடிப்பதற்கான அழுத்தத்தினை வழங்கவேண்டும்.
அவ்வாறு பின்பற்றாதுவிடின் கூர்ப்படையும் நுண்ணுயிர்களால் விளையும் மனிதப்பேரழிவுகளை மருத்துவத்தினால் தடுக்க இய லாது போய்விடும்.
Related Posts :
- Back to Home »
- அழகு , உணவே மருந்து »
- அசைவ உணவுகளால் விளையும் வினைகள்...

