Posted by : NEWMANNAR Tuesday, 3 February 2015

ரோஜா மலர் நேருவுக்குப் பிடிக்கும். பெண்களுக்குப் பிடிக்கும். காதலிகளுக்கு வாங்கித் தர காதலன்களுக்குப் பிடிக்கும். இந்த ரோஜாப்பூவின் மருத்துவ குணங்கள் அறிந்தால், இதை அனைவருக்கும் பிடிக்கும்!

* ரோஜாப்பூவில் குல்கந்து செய்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்னையே இருக்காது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடும் இந்த குல்கந்து கடைகளில் கிடைக்கிறது. நாமே தயாரித்தால் சுத்தமாக, சுகாதாரமானதாக இருக்கும்.

 தேவையான அளவு ரோஜாப்பூக்களை எடுத்துக்கொண்டு அதே அளவு கற்கண்டையும் சேர்த்து கொஞ்சம் கொஞ்சமாக இடிக்க வேண்டும். லேகியம் போல் கட்டியாகி குல்கந்து பதத்துக்கு வந்ததும் பாட்டிலில் எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதில் சிறுவர்கள் அரை டீஸ்பூனும், பெரியவர்கள் ஒரு டீஸ்பூனும் காலை மாலை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்னை நீங்குவதோடு ரத்தம் சுத்தமாகும். இதுமட்டுமல்லாமல் ரத்த பேதி, வெள்ளைப்படுதல் போன்றவையும் சரியாகும்.

* குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வயிற்றுவலி வரும் நேரங்களில் இந்த ரோஜா கைகொடுக்கும். நாட்டு மருந்துக் கடைகளில் ரோஜா மொக்கு 20 கிராம், சதக்குப்பை 20 கிராம் வாங்கி வந்து தனித்தனியாக இடித்து அது மூழ்கும் அளவு வெந்நீர் விட்டு மூடி வைக்க வேண்டும். நான்கு மணி நேரம் கழித்து அதை வடிகட்டி வைத்துக்கொள்ள வேண்டும். அதில் அரை டீஸ்பூன் அளவு குழந்தைகளுக்கும், ஒரு டீஸ்பூன் அளவு பெரியவர்களுக்கும் குடிக்கக் கொடுக்க வேண்டும். அடுத்தடுத்த நான்கு மணி நேரத்துக்கு ஒருமுறை என எட்டு தடவை குடித்து வந்தால் எப்பேர்ப்பட்ட வயிற்றுவலியும் குணமாகும்.

* ரோஜாப்பூவை வெறுமனே கஷாயம் போட்டுக் குடித்தால் பெண்களுக்கு கர்ப்பகாலங்களில் சிறுநீர் சீராக வெளியேறும். மேலும் இந்த ரோஜாப்பூ கஷாயம் குடிப்பதால் வாய்ப்புண், வயிற்றுப்புண் சரியாகும். ஒரு டம்ளர் தண்ணீரில் காய்ந்த ரோஜாப்பூக்கள் சிலவற்றைப்போட்டு பாதியாக வற்றுமளவு காய்ச்சி வடிகட்டி கற்கண்டு அல்லது சர்க்கரை சேர்த்தால் ரோஜாப்பூ கஷாயம் ரெடி.

 இந்தக் கஷாயத்துடன் சுவைக்காக கொஞ்சம் பால் சேர்த்துக்கொள்ளலாம். சளி பிடித்திருக்கும்போது ரோஜாப்பூவை முகர்ந்து பார்த்தால் மூக்கடைப்பு விலகுவதோடு சளி விலகும். வெறுமனே ரோஜாப்பூவை மென்று தின்றால் வயிறு சுத்தமாகும். ரோஜா மொட்டுக்களை லேசாக வதக்கி துவையல் செய்து சாப்பிட்டால் சீதபேதி சரியாகும். வெற்றிலை போடும்போது ஒன்றிரண்டு ரோஜா இதழ்களையும் சேர்த்து மென்று தின்று வந்தால் வாயில் நறுமணம் கமழும்!

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -