Posted by : NEWMANNAR Saturday, 24 January 2015


பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம் – மிளகின் மகத்துவத்தை உணர்த்துவதற்காக கூறப்பட்ட பழமொழி இது!

நம் வீடுகளில் ரசம் வைக்கும்போதும், குழம்பு வைக்கும்போதும் மிளகு சேர்ப்போம். ஆனால் அது உணவு மட்டுமல்ல, பல்வேறு பிணிகளுக்கான மருந்தும்கூட! இதோ சில…

* சளி பிரச்னையில் வதைபடும்போது, இரவு உறங்குவதற்கு முன் 50 மில்லி பாலுடன் அதே அளவு தண்ணீர் விட்டு, 10 பூண்டு பற்களை உரித்துப்போட்டு நன்றாக வேக வைக்க வேண்டும். பாதியாக வற்றியதும் 2, 3 சிட்டிகை மிளகுத்தூள் மற்றும் ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து அடுப்பிலிருந்து இறக்க வேண்டும். அதனுடன் தேவையான அளவு பனைவெல்லமோ, சர்க்கரையோ சேர்த்து நன்றாகக் கடைந்து சாப்பிட்டால் சளி விலகுவதோடு இரவில் சுவாசப் பிரச்னை இல்லாமல் நிம்மதியாக தூங்கலாம். கூடுதல் போனஸாக மலச்சிக்கல் தீரும்.

* மூக்கடைப்பு ஏற்பட்டிருக்கும்போது மிளகை தீயில் சுட்டு அதன் புகையை சுவாசித்தால் அடுத்த நொடியே அடைப்பு விலகுவதோடு தடையின்றி சுவாசிக்க முடியும்.

* சுக்கு, மிளகு, திப்பிலி தலா 50 மில்லி அளவு எடுத்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ளுங்கள். அதில் ஒரு கிராம் அளவு எடுத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், கோழைக்கட்டு போன்ற கப நோய்கள் சீக்கிரம் சரியாகிவிடும்.

* சளி தொந்தரவுகளின்போது மிளகு ரசம் கைகொடுக்கும். மிளகு, சீரகம், பூண்டு, தக்காளி, புளி, கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை கலந்த கலவையில் எல்லோருமே ரசம் வைப்போம். இந்த ரசத்தை சளி நேரத்தில் சூடாக அருந்துவதால் சுவாசம் எளிதாவதோடு, நெஞ்சுச்சளியை அறுத்துவிடும். கடைகளில் சூப் குடிக்கும்போது மேலாக மிளகுத்தூள் தூவுவார்கள். அப்படிச் செய்வதும் இதம் தரும்.

* வறட்டு இருமலின்போது மிளகுத்தூளுடன் தேன் கலந்து சாப்பிட்டால் பலன் கொடுக்கும். கோழை கட்டியிருக்கும்போது 5 மிளகும், 10 துளசி இலையையும் 200 மில்லி நீரில் போட்டு கொதிக்க வைத்து அந்தக் கசாயத்தைக் குடிக்க, நிவாரணம் கிடைக்கும்.

* ஆஸ்துமா தொந்தரவு அதிகரிக்கும் வேளையில் வெற்றிலையுடன் 5 மிளகை சேர்த்து மென்று தின்றால் சுவாசம் எளிதாகி நிம்மதி கிடைக்கும்.

* தேள், பூரான் மற்றும் விஷ பூச்சிகள் எதாவது கடித்தாலோ, என்ன காரணம் என்றே தெரியாமல் உடம்பெல்லாம் தடித்து வீங்கி அலர்ஜி வந்தாலோ வெற்றிலையுடன் 3 அல்லது 5 மிளகு சேர்த்து மென்று தின்றால் விஷம் முறிந்துவிடும்.

* பொதுவாக மிளகு கசாயம் சளி, காய்ச்சல், தலைவலி, வாந்தி போன்றவற்றை குணப்படுத்தும். எப்பேர்ப்பட்ட காய்ச்சல் வந்தாலும் 10, 15 மிளகை எடுத்து வெறுமனே சட்டியில் போட்டு அது கருகும் அளவு வறுத்து, மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு பாதியாக வற்றும்வரை கொதிக்க வைக்க வேண்டும். இந்தக் கசாயத்தை 2 மணி நேரத்துக்கு ஒருமுறை குடித்து வந்தால் எந்த விதமான காய்ச்சலும் பறந்துவிடும். ஒருமுறை வறுத்த மிளகை மீண்டும் ஒருமுறை தண்ணீர் விட்டு கசாயமாக்கிப் பயன்படுத்திக்கொள்ளலாம். மூன்றாவது முறை கசாயம் செய்ய மீண்டும் மிளகை வறுத்து தண்ணீர் விட்டு காய்ச்ச வேண்டும். இப்படி மாற்றி மாற்றி செய்து வந்தால் நிச்சயம் நிவாரணம் கிடைக்கும். இதே கசாயம் தொண்டைவலி, தொண்டை கமறல் போன்றவற்றையும் சரி செய்யும்.

* பாரிச வாயு வந்த நேரங்களில் வலி வந்து பாடாய்ப்படுத்தும். சுத்தமான ஒரு சட்டியை அடுப்பில் வைத்து ஒரு கைப்பிடி அளவு மிளகைப்போட்டு தீப்பொறி பறக்கும் அளவு வறுக்க வேண்டும். பிறகு அதை ஒரு துணியில் போட்டு பாரிச வாயு வலி உள்ள இடத்தில் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது அங்கிருந்த வாயு கலைந்துவிடும். அதன்பிறகு மிளகு கசாயம் செய்து குடிக்கக் கொடுத்து வந்தால் காலப்போக்கில் பாரிச வாயு குணமாகும்.

* இளைப்பு நோய் உள்ளவர்கள் குளிர்காலத்தில் மிகவும் கஷ்டப்படுவார்கள். மூச்சுவிடக்கூட திணறுவார்கள். அவர்கள் மிளகு, பிஞ்சு கடுக்காய், திப்பிலி, சுக்கு போன்றவற்றை சம அளவு எடுத்து நன்றாக காய வைத்து பொடியாக்கி சலித்து எடுத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் அச்சுவெல்லத்தை சேர்த்து பிசைந்து சுண்டைக்காய் அளவு மாத்திரை போல் செய்து கொள்ள வேண்டும். அதில் ஒரு சுண்டைக்காய் அளவு காலை, மாலை சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் இளைப்பு சரியாகும். இந்த மருந்தை சாப்பிட்டு 2 வாரத்திற்கு பிறகே குணம் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மருந்து சாப்பிடும் வேளையில் நீர்க்காய்கறிகள், இளநீர், தயிர், மோர் போன்றவற்றைச் சாப்பிடக்கூடாது.

மிளகு இப்படிப் பல பிரச்னைகளில் இருந்து நிவாரணம் அளிக்கும். அதையும் மீறி தொந்தரவு இருந்தால் இதை ஒரு முதலுதவியாக எடுத்துக்கொண்டு, அடுத்தகட்ட சிகிச்சைக்கு வைத்தியர் அல்லது டாக்டரை சந்திப்பது நல்லது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -