Posted by : Admin Tuesday, 15 July 2014

சுரைக்காய் குடுவையில் நீர் நிரப்பி, குளிர்ச்சியாக குடித்து வந்தனர் நம் முன்னோர். உடலுக்குக் குளிர்ச்சியையும், ஊட்டத்தையும் தரும் சுரைக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் ஏராளம். 'சுரைக்காய் வெள்ளரிக் குடும்பத்தைச் சேர்ந்த நீர்க் காய். இனிப்பு, கசப்பு என இரு சுவைகளில் இருந்தாலும், இனிப்பு சுவை கொண்டதையே நாம் அதிகமாகப் பயன்படுத்துகிறோம். ஆண்மைக் குறைபாட்டை நீக்கும் சிறந்த காய் இது. 

தினசரி உண்டுவந்தால், கல் அடைப்பு நீங்கும். உடலுக்குக் குளிர்ச்சியைத் தரக்கூடியது. சிறுநீர் பெருக்கத்தைத் தூண்டும்; உடலின் வெப்பநிலையையும், பித்தத்தையும் சமநிலைப்படுத்தும். இதனை 'பித்த சமனி' என்றும் சொல்வர். சுரைக்காயில் விட்டமின் பி மற்றும் சி உள்ளன. கை, கால்களில் குறிப்பாகப் பாதங்களில் ஏற்படக்கூடிய எரிச்சல் நீங்க, சுரைக்காயின் சதைப்பகுதியை துணியில் வைத்துக் கட்டினால் எரிச்சல் குணமாகும். 

சுரைக்காயின் சதைப்பகுதியோடு எலுமிச்சம்பழத்தின் சாற்றினையும் கலந்து தலையில் தேய்த்து குளித்துவந்தால், குளிர்ச்சி ஏற்படும். தினமும் சுரைக்காய் சாறு அருந்திவந்தால், சிறுநீர் பாதையில் ஏற்படக்கூடிய எரிச்சல், பெண்களுக்கு சிறுநீர்ப்பாதை தொற்றுநோயினால் ஏற்படக்கூடிய எரிச்சல் ஆகியவற்றைக் குணப்படுத்தும். குழந்தை பிறந்த பிறகு தாய்ப்பால் சுரப்பினை அதிகரிக்கவும், உடல் எடை குறைக்க நினைப்பவர்களும், சுரைக்காயுடன் பாசிப்பயிறு சேர்த்து கூட்டு வைத்து சாப்பிடலாம்.உடலில் உள்ள தேவையற்ற நீர்ச்சத்துக்கள் நீங்கி எடை குறையும். 

 சுரைக்காயை அரைத்து உடலில் பூசி வந்தால், உடலின் வெப்பநிலை குறைவதோடு குளிர்ச்சியும் ஏற்படும். சுரைக்காயின் சதைப்பகுதியை அரைத்து நெற்றியில் தடவிவர, கண் எரிச்சல் குணமாகும். வெயிலில் அதிகமாக அலைவதால் ஏற்படும் தலைவலி, ஒற்றை தலைவலி ஆகியவற்றுக்கு இந்த சுரைக்காயின் சதைப்பகுதியை துணியில் வைத்து கட்டியும், அதனை அரைத்தும் பயன்படுத்தலாம். மெலனின் குறைப்பாட்டினால் ஏற்படும் அல்புனிசம் பாதிப்பு உள்ளவர்களுக்கு (உடலில் ஆங்காங்கே வெள்ளையாக இருக்கும், சூரிய ஒளி பட்டால் எரிச்சல் ஏற்படும்) சுரைக்காயை அரைத்துத் தேய்த்து வந்தால், எரிச்சல் குணமாகும். பொதுவாகச் சுரைக்காய் குளிர்ச்சி தன்மை வாய்ந்தது.இதனை, குளிர்காலத்தில் பயன்படுத்தும்போது சளிபிடிக்க வாய்ப்புள்ளது. 

எனவே, சுரைக்காயுடன் மல்லி, மிளகுத்தூள், உப்பு ஆகியவை கலந்து சாலட் செய்து சாப்பிடலாம். சுரைக்காய் குடுவையில், தண்ணீரை சேமித்துவைத்துக் குடித்து வந்தால் அதிகப்படியாக ஏற்படும் தாகம் குறையும். அந்தத் தண்ணீரில் உள்ள வைட்டமின் சத்துக்களும் அதிகமாகும். இந்த நீரில் தேனை வைத்து பாதுகாத்தும் உண்டு வரலாம். இந்தச் சுரை ஓட்டினைச் சாப்பிட அல்லது உணவுப்பொருட்கள் வைக்கும் பாத்திரமாகவும் பயன்படுத்தலாம் என்கிறார். சுரைக்காய் இலையுடன் வெங்காயம், பூண்டு சேர்த்து கூட்டு வைத்து சாப்பிட்டுவந்தால், நீர் பிணிகள் நீங்கும்

உடலில் ஏற்படும் வீக்கங்களையும், நீரேற்ற பிணிகளையும் குறைக்கும். சிறந்த மலமிலக்கியாகவும், சிறுநீர் பெருக்கத்தைத் தூண்டக்கூடிய பொருளாகவும் செயல்படும். சுரை இலையுடன் தண்ணீர் சேர்த்துக் கசாயம் தயாரித்து, தேவையான அளவு சர்க்கரை கலந்து சாப்பிட்டால், மஞ்சள் காமாலை சரியாகும்.

 சுரை இலைச்சாறுடன் சம அளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து, நன்றாகக் கொதிக்கவைத்து எண்ணெய் தயாரித்துக்கொள்ளலாம். காச நோயினால் ஏற்படக்கூடிய நிணநீர் கோள வீக்கம், அதிகமாகச் சளி பிடிக்கும் குழந்தைகளுக்குக் கழுத்துப் பகுதியில் ஏற்படக்கூடிய கண்டமாலைக் கட்டிகளுக்கு, இந்த எண்ணெயை வெளிப்புறமாகத் தடவி வந்தால், கட்டியின் வீக்கம் விரைவில் குறையும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -