Posted by : Admin Tuesday, 15 May 2012

யாழ்.குடாநாட்டைக் கலங்க வைத்த, இரத்தக் கறை படிந்த குமுதினிப் படகுப் படுகொலையின் 27ஆவது ஆண்டு நிறைவு இன்றாகும்.
1985 ஆம் ஆண்டு மே 15 ஆம் நாள் நெடுந்தீவிற்கும் புங்குடுதீவிற்கும் இடையில் சேவையாற்றிய குமுதினிப் படகில் பயணம் செய்தவர்கள் கூட்டாகப் படுகொலை செய்யப்பட்ட நாள்.

நெடுந்தீவின் மாவலித்துறையில் இருந்து நயினாதீவின் குறிகாட்டுவான் துறைமுகத்திற்கு குமுதினிப் படகில் சென்ற பயணிகள், இலங்கை கடற்படையினரால் நடுக்கடலில் வழிமறிக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.
குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 33 பேர் குத்தியும் வெட்டியும் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் காப்பாற்றப்பட்டனர்.
நேரில் கண்டவர்களின் சாட்சியத்தின் படி, இலங்கை கடற்படையைச் சேர்ந்தவர்கள் என நம்பப்படும் ஆறு நபர்கள் படகில் ஏறினர். படகில் பயணம் செய்தவர்களை முன்னே வரும்படி அழைத்து ஒவ்வோருவரையும் தமது பெயர், வயது, முகவரி, எங்கு செல்கிறார்கள் போன்ற விவரங்களை உரத்துக் கூறும்படி பணிக்கப்பட்டார்கள்.
இதன்பின் ஈவிரக்கமின்றி கத்தியால் குத்தியும் கோடரிகளால் வெட்டியும் அவர்கள் கொல்லப்பட்டனர். குற்றுயிரானவர்கள் குரல் எழுப்ப முடியாது இறந்தவர்கள் போல் கிடந்தனர். பயணிகளில் சிலர் கடலில் பாய்ந்து தப்பிக்க முயன்றனர். அவர்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர்
பொது மக்களின் அன்றாட கடல் போக்குவரத்துக்கு குமுதினிப் படகே முக்கிய சாதனமாக இருந்தது. அவர்களது வாழ்வோடு இணைபிரியாத ஒன்றாக இருந்தது எனலாம். ஆனால் இதே நாள் இப்படகு படுகொலையின் இரத்தச் சாட்சியாக வரலாறாகி நிற்கிறது.
இவ்வாறான வெறித்தனமான தாக்குதலின் பின் காயமடைந்தோர் புங்குடுதீவு வைத்தியசாலை, யாழ்.போதனா வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களைத் தேடி அந்த வன்முறையாளர்கள் சாட்சிகளை அழித்திட மேற்படி வைத்தியசாலைகளில் அலைந்ததும் உண்டு.

ஏழு மாதக் குழந்தை முதல் வயோதிபர்கள் வரை ஈவிரக்கமின்றி நடுக்கடலில் படுகொலை செய்யப்பட்டமை குறித்து இதுவரை இந்த ஜனநாயக நாட்டில் உரிய நீதி கிடைக்காது வருடாவருடம் அந்த அப்பாவி மக்களை நினைவுகூருவது மட்டுமே யதார்த்தமாகியுள்ளது.
27வருடங்கள் கடந்தாலும் அரச பயங்கரவாதத்தின் இரத்தசாட்சியம் இந்த குமுதினி படகு படுகொலை.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -