Posted by : NEWMANNAR Wednesday, 7 January 2015

செயற்கையாக குடிநீரை சுத்திகரிக்கும் பியூரிபையர்கள் ஆயிரம் வந்தாலும், இயற்கையிலேயே கிடைக்கும் சுத்திகரிப்பான்களுக்கு ஈடு இணை எதுவும் இல்லை. மழைக்காலம் மட்டுமில்லாமல், எல்லாப் பருவக் காலங்களிலும் நீரை சுத்திகரிக்கும் மூலிகைகள் மற்றும் இயற்கை சார்ந்த பொருட்களைப் பற்றி விரிவாக விளக்கினார் சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவர் ராதிகா சந்திரபாகம்.

நம் முன்னோர்கள் உபயோகித்த மண்பாண்டமே மிகசிறந்த அளவில் நீரை சுத்திகரிப்பதோடு, நீரை குளிர்விக்கவும் பயன்படுகிறது. இயற்கை தந்த பியூரிபையர்கள் அத்தனையும் நமக்குக் கிடைத்த வரம்.



தேத்தான் கொட்டை:

நீரை அதிகளவு சுத்திகரிக்கும் திறன் வாய்ந்தது தேத்தான் கொட்டை. தேவையான அளவு தேத்தான் கொட்டையை எடுத்து அரைத்து நீரில் கரைத்துவிட வேண்டும். இது நீரில் உள்ள அனைத்து கிருமிகளையும் நீக்கி, தூய்மையான தண்ணீரை தரும். அதோடு, உடல் இளைத்தவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்ற குடிநீர் இது. வீட்டில் கிணறு வைத்திருப்பவர்கள், அரைக் கிலோ தேத்தான் கொட்டையைக் கிணற்றில் கொட்டிவிட்டால் போதும். எப்பேர்பட்ட அழுக்கான தண்ணீரையும் சுத்திகரித்துச் சத்தான நீராக மாற்றிவிடும்.

முருங்கை விதை:

தேத்தான் கொட்டையைப் போலவே முருங்கை விதையும் நீரில் உள்ள பாக்டீரியாக்களை நீக்கி தூய்மையான நீரை தந்து விடும். இரவு படுக்கும் முன் நீரில் போட்டுவிட்டு, காலையில் நீரை வடிக்கட்டி குடித்தால் உடலுக்கு மிகவும் நல்லது.

துளசி:

துளசியில் இல்லாத சத்துகளே இல்லை. மிகச் சிறந்த கிருமி நாசினி. இதைத் தினமும் பருகினால், எந்தவொரு நோயும் நம்மை நெருங்காது.

செப்புப் பாத்திரம்:

உள்ளே ஈயம் பூசப்படாத செப்புக் குடத்தில் நீரை நிரப்பிப் பருகினால், உடலுக்குப் புத்துணர்வு கிடைக்கும். செப்புக் குடம் இல்லாதவர்கள், செப்பு காசுகளைத் தண்ணீரில் போட்டு வைத்துகூட உபயோகிக்கலாம். அலுமினியம் பாத்திரத்தில் நீர் வைப்பதை தவிர்த்துச் செப்பு குடத்தினுள் நீரைவைத்தால், நீரில் உள்ள அத்தனை கிருமிகளையும் அடியோடு நீக்கிவிடும்.

வாழைப்பழத் தோல்:

வாழைப்பழத் தோலைக் கொண்டு தண்ணீரை சுத்தப்படுத்தலாம் என்பதைச் சமீபத்திய ஆய்வு கண்டறிந்துள்ளது. நீரில் உள்ள நச்சுக்களை வாழைப்பழத்தோல் 90 சதவிகிதம் உறிஞ்சிவிடும். செலவும் குறைவு என்பதோடு, ஒரு வாழைப்பழத் தோலை 11 முறை திரும்பத் திரும்பப் பயன்படுத்தலாம்.

வெட்டிவேர் மற்றும் நன்னாரி:

நீரில் வெட்டிவேர் மற்றும் நன்னாரி வேரைத் துணியில் முடிச்சாகக் கட்டி போட்டு, பின்னர் அந்த நீரினைப் பருகினால் கோடைக் காலத்தில் ஏற்படும் அதிகத் தாகத்தைத் தீர்ப்பதோடு, உடல் வெப்பத்தையும் குறைக்கும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -