Posted by : NEWMANNAR Friday, 9 January 2015

நீண்டநாட்களாக மிகவும் எதிர்பார்க்கப்பட்ட புது ரக ஆண்டிபயாடிக் ஒன்றை தாங்கள் கண்டுபிடித்திருப்பதாக அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவித்திருக்கிறார்கள்.

பாக்டீரியாக்களை வளர்ப்பதில் அமெரிக்க விஞ்ஞானிகள் கடைபிடித்த புதிய வழிமுறைகள் 25 புதிய ஆண்டிபயாடிக் மருந்துகளை உருவாக்க உதவியிருக்கிறது. இதில் ஒரு ஆண்டிபயாடிக் மருந்து “மிகவும் நம்பிக்கையளிப்பதாக” விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

தற்போது பயன்பாட்டில் இருக்கும் ஆண்டிபயாடிக் மருந்துகள் எல்லாமே ஏறக்குறைய முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டவை.

இந்த புதிய கண்டுபிடிப்பானது மருத்துவ உலகின் மைல்கல் என்று வர்ணிக்கப்படுகிறது. இதன் மூலம் மேலும் அதிகமான புதுரக ஆண்டிபயாடிக் மருந்துகளை கண்டுபிடிக்க முடியும் என்றும் நம்பப்படுகிறது.

1950களிலும் 1960களிலும் பல ஆண்டிபயாடிக் மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் 1987ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுவரை எந்த புதிய ஆண்டிபயாடிக் மருந்தும் கண்டுபிடிக்கப்பட்டு மருத்துவர் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்படவில்லை.

இதன் விளைவாக கடந்த முப்பது ஆண்டுகளில் நோயை தோற்றுவிக்கும் நுண்ணுயிரிகள் ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கு தப்பி உயிர்வாழும் வகையில் தம்மை பெருமளவு தகவமைத்துக் கொள்ளத் துவங்கிவிட்டன. உதாரணமாக மருந்துகளால் குணப்படுத்தமுடியாத எலும்புறுக்கிநோய் இன்று ஏறக்குறைய இருக்கும் எந்த மருந்துக்கும் கட்டுப்படாததொரு நிலையை எட்டியிருக்கிறது.

இதன் விளைவாக, எல்லாவிதமான ஆண்டிபயாடிக் மருந்துகளுக்கும் மூலாதாரமான மண்ணில் இருந்து புது ரக ஆண்டிபயாடிக் மருந்துகளை கண்டுபிடிப்பதற்கான முயற்சியில் மசெஷூசெட்ஸின் போஸ்டனில் இருக்கும் நார்த் ஈஸ்டர்ன் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இறங்கினார்கள்.

மண்ணில் ஏராளமான நுண்ணுயிரிகள் இருந்தாலும் அவற்றில் ஒரே ஒரு சதவீதத்தைத்தான் ஆய்வகத்தில் வளர்க்கமுடியும்.
எனவே நுண்ணுயிரிகள் இயற்கையாக வாழும் மண்ணையே ஆய்வகமாக இந்த ஆய்வாளர்கள் மாற்றிக்கொண்டார்கள்.

இந்த ஆய்வின் முதல்கட்டமாக, பாக்டீரியாக்களுக்கான நிலத்தடி விடுதி ஒன்றை இந்த ஆய்வாளர்கள் உருவாக்கினார்கள். இந்த நிலத்தடி பாக்டீரியா விடுதியில் ஒவ்வொரு அறையிலும் ஒரே ஒரு பாக்டீரியத்தை வைத்து, அந்த ஒட்டுமொத்த உபகரணத்தையும் மண்ணுக்குள் புதைத்துவிட்டனர்.

இந்த உபகரணம் வடிவமைக்கப்பட்ட விதம் காரணமாக இந்த பாக்டீரியங்கள் வைக்கப்பட்ட அறைகள் எல்லாவற்றிலும் மண் உள்ளே புகுந்தது. ஆனால் பாக்டீரியங்களோ தனித்தனியாக பிரிந்தே இருந்தன.

சில நாட்களுக்குப்பிறகு இந்த பாக்டீரியங்கள் புதைக்கப்பட்ட இடத்தின் மண் தோண்டியெடுத்து ஆராயப்பட்டது.

அதில் ஒரு குறிப்பிட்ட ஆய்வாளரின் தோட்ட மண்ணில் புதைக்கப்பட்டிருந்த பாக்டீரியத்துக்கு அந்த மண்ணில் இருந்த நுண்ணுயிரிகள் உருவாக்கிய எதிர்வினை/தடுப்பு வேதிப்பொருட்களை ஆய்வாளர்கள் அடையாளம் கண்டனர். இவற்றை பரிசோதனை செய்தபோது அதில் ஆண்டிபயாடிக் மருந்து தயாரிப்பதற்கான மூலக்கூறுகள் இதில் இருப்பதை கண்டறிந்துள்ளனர்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -