Posted by : Admin Saturday, 13 October 2012


இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு, பாண்டியன்குளம் கிராமத்தில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் அமைத்து கொடுக்கப்பட்ட 50 வீடுகளில் பெரும்பாலானவை சுவர் இடிந்தும், நிலம் வெடித்தும் மக்கள் தொடர்ந்தும் வாழ முடியாத அபாய கட்டத்தில் உள்ளனர்.
அதிகாரிகளின் பாராமுகம், ஒப்பந்தகாரரின் பொறுப்பற்ற தன்மையுமே தமது இந்த நிலைக்கு காரணம் என இவ்வீட்டுத்திட்ட பயணாளிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட பாண்டியன்குளம் கிராமத்தில் நிலமற்ற மக்களுக்காக அப்பகுதில் ஒதுக்குப்புறமாகவுள்ள காட்டுப்பகுதியில் கால் ஏக்கர் விதம் நிலம் வழங்கி இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் சுமார் 50வீடுகள் அமைக்கப்பட்டு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மக்களிடம் அவை கையளிக்கப்பட்டன.
ஆனால் அமைக்கப்பட்டுள்ள அத்தனை வீடுகளும் சேதத்துடனேயே காணப்பபடுகின்றன. இவ்வீடுகளில் மக்கள் தொடர்ந்தும் குடியிருக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில் ஒரு வீட்டின் பின்புறம் முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளது. மேலும் பல வீடுகள் சிறிய மழைக்கே ஒழுக ஆரம்பித்திருக்கின்றன.
இதேபோல் கட்டப்பட்ட வீடுகளில் ஒன்றிரண்டை தவிர ஏனைய அனைத்து வீடுகளும் சேதமடைந்துள்ளன.
இடிந்த வீடுகளுக்குள் வேறு வழியில்லாமல் அபாயகரமான வாழ்வை வாழ்ந்து கொண்டிருப்பதாக வீட்டுத்திட்ட பயணாளிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனினும் 15 வீடுகள் சேதமடைந்திருந்த நிலையில் அவை சீர்செய்யப்பட்டுள்ளதாக பிரதேச செயலகம் தெரிவித்துள்ளது.
அடர்ந்த காட்டுப்பகுதியில் இந்த குடியேற்றத்திட்டம் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ள நிலையில் மக்களுக்கான குடிநீர், மற்றும் இதர தேவைக்கான நீர் பெறுவதற்கான வசதிகள் இன்னமும் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை.
மேலும் குடியேற்றத்திட்டத்திற்குள் வீதிகள் எவையும் போடப்படாத நிலையில் சில தினங்கள் பெய்திருந்த சிறிய மழைக்கே வீதி சகதியாக மாறியிருக்கின்றன.
இந்நிலையில் வீதிகள் அமைக்கப்படாமைக்கான காரணம் குறித்துக் மாந்தை கிழக்கு பிரதேச சபையினரிடம் கேட்டபோது, வீதிகளை அமைப்பதற்கான மூல வளங்கள் குறிப்பாக கிரவல், கருங்கல் போன்றன தமது பிரதேசத்திலேயே உள்ளபோதும், அவற்றை பெறுவதற்கு இராணுவம் பெரிய தடையாகவுள்ளதாக சுட்டிக்காட்டினர்.
இந்த மூல வளங்களை எடுப்பதற்கு படையினர் தொடர்ந்தும் அனுமதி மறுத்துள்ள நிலையில் தமது பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட அனைத்து அபிவிருத்திப் பணிகளும் பின் தள்ளிப்போய்க் கொண்டிருப்பதாகவும் பிரதேச சபையினர் தெரிவித்துள்ளனர்.
இதேநேரம் சில தென்னிலங்கை ஒப்பந்தக்காரர் இந்த வளங்களை சுரண்டி வருவதாகவும் குற்றஞ்சாட்டினர்.

வீட்டுத்திட்டம் வழங்கப்பட்டு விட்டதாகவும், மக்கள் நின்மதியாக வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் பிரசாரப்படுத்தப்படும் நிலையில் காட்டுப்பகுதியினுள் குடிநீர், முறையான வதிவிடம், உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவுமின்றி இப்பகுதி மக்கள் அசௌகரியங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -