Posted by : Admin Saturday, 15 September 2012

பல் போனால் சொல் போச்சு என்பது பழமொழி. அதுவும் சிறு வயதில் பல் போனால் சாப்பிடுவதில் சிரமம் ஏற்படும், முக அழகும் கெட்டுப் போய் விடும்.
பல் சொத்தையைக் கண்டு கொள்ளாமல் விட்டால் அது பல்லின் வேரை பலம் இழக்க செய்து பல்லை இழக்கும் நிலைக்கு தள்ளப்படும்.

தற்பொழுது உள்ள சிகிச்சை முறைகளின் மூலம் பல்லின் வேர்ப்பகுதியை பாதுகாத்து பல்லை விழாமல் காத்துக் கொள்ள முடியும். சொத்தைப் பல்லுக்கு ஆரம்பத்திலேயே வேர் சிகிச்சை செய்வதன் மூலம் 20 ஆண்டுகள் வரை பல்லை பாதுகாக்க முடியும் என்கின்றனர் பல் மருத்துவர்.
சிறு வயதில் இருந்தே பல்லை ஆரோக்யமாக வைப்பதில் கவனம் செலுத்த வேண்டும். பிரச்னை வந்து, வலிக்க ஆரம்பித்த பின்னர் தான் மருத்துவரைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே பலருக்கும் உள்ளது.
குழந்தைகளுக்கு பல் முளைக்க ஆரம்பித்ததில் இருந்தே தினமும் இருமுறை பல் துலக்க வேண்டும். பல்லின் இடுக்குகளில் உணவுப் பொருள்கள் படியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு சிக்கிக் கொண்டால் வாய் கொப்பளித்து உடனடியாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.
சத்துக் குறைபாடான உணவுகள் மற்றும் உடலில் ஏற்படும் சர்க்கரை உள்ளிட்ட மற்ற நோய்களின் காரணமாகவும் பல் ஆரோக்யம் விரைவில் கெட்டுவிட வாய்ப்புள்ளது.
எச்சிலில் உள்ள ஏசிட் மற்றும் உணவில் உள்ள கார்போஹைட்ரேட்டும் சேர்ந்து பல்லில் சொத்தையை உருவாக்குகிறது. பல் சொத்தை பெரிதாக வளர்ந்து பல்லின் வேரை தாக்கும் போது தான் வலி ஏற்படுகிறது. இந்த வலியை கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டால் பல்லின் வேர்ப்பகுதி முழுவதும் பாதிக்கப்பட்டு பல்லை முழுமையாக இழக்கும் நிலை ஏற்படும்.
பல்லில் சொத்தை ஏற்படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் அல்லது பல் சொத்தை வாயில் தொந்தரவை ஏற்படுத்தும் போதே பல் மருத்துவரிடம் காட்டி வேர் சிகிச்சை மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம்.
வேரின் தன்மையைப் பொறுத்து பல்லின் ஆயுள் கூடும். பல்லின் வேர்ப்பகுதியில் பாதிப்பு ஆரம்பித்த உடன் செயற்கை வேர் வைத்து பல்லை உறுதியாக்கி விடலாம்.
இந்த வேர் சிகிச்சையின் மூலம் 20 ஆண்டுகள் வரை பல்லை காப்பாற்றலாம். வேர் சிகிச்சை என்பது எந்த வயதினருக்கும் செய்யலாம். சிறு வயது குழந்தைகளுக்கு கடைவாய்ப்பல் சொத்தை ஏற்பட்டால் அந்தப் பல் 12 வயது வரை அவர்களுக்குத் தேவைப்படும். அதற்கும் வேர் சிகிச்சை உள்ளது.
பொதுவாக வயதானவர்கள் மற்றும் சர்க்கரை, ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய் ஏற்கனவே உடலில் உள்ளவர்களுக்கும் அதற்கான அடிப்படை பரிசோதனைகள் செய்யப்பட்ட பின்னர் வேர் சிகிச்சை செய்யப்படும்.
வேர் சிகிச்சையின் பின்னர் பல்லில் வலி மற்றும் சேதம் எதுவும் இன்றி நார்மலான பல் போலவே பயன்படுத்தலாம். இதே போல் பல்லில் ஏற்படும் பல் கூச்சம், ஈறு வீக்கம், பல் சொத்தை, வாய் நாற்றம் உள்ளிட்ட எந்தப் பிரச்னையாக இருந்தாலும் உடனடியாக பல் மருத்துவரை அணுகி சிகிச்சை செய்து கொள்வதன் மூலம் பல்லின் ஆரோக்கியத்தையும், முகத்தில் அழகையும் பாதுகாக்க முடியும்.
பாதுகாப்பு முறை: சிறு வயதில் இருந்தே குழந்தைகளுக்கு பல்லை சுத்தமாக வைத்துக் கொள்வது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். தினமும் இரண்டு முறை கட்டாயம் பல் துலக்க வேண்டும்.
மாதம் ஒரு முறை பிரஷ்ஷை மாற்ற வேண்டும். பல்லின் தன்மைக்கு தகுந்த பிரஷ்ஷை தெரிவு செய்வதும் அவசியம்.
பல் இடுக்குகளில் உணவுப் பொருட்கள் சேராமல் பாதுகாக்க வேண்டும். குளிர்ச்சியான பதார்த்தங்கள் அடிக்கடி சாப்பிடுவதை தவிர்க்கவும்.
மவுத் வாஷ் பயன்படுத்தியும் பல்லை சுத்தமாக வைத்துக் கொள்ளலாம். இனிப்புகள் சாப்பிட்டால் கண்டிப்பாக பல்லை சுத்தம் செய்ய வேண்டும்.
பிரச்னையே இல்லாவிட்டாலும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை பல் மருத்துவரிடம் காண்பித்து பல் ஆரோக்யத்தை பாதுகாக்க வேண்டும்.
கால்சியம் உள்ள உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் பல்லின் வலி மையை பாதுகாக்க முடியும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -