Posted by : Admin Saturday, 2 June 2012


கல்யாணமுருங்கை ஏராளமான மருத்துவகுணம் கொண்டுள்ளது. இந்தியாவின் இலையுதிர் காடுகளிலும், அந்தமானிலும் காட்டில் இயல்பாகவே வளரும். இது துவர்ப்பும், கசப்பும் கலந்த சுவையுடையது.


இலை சிறுநீர் பெருக்கி, மலமிளக்கி, தாய்பால் பெருக்கி, வாந்தி, வயிற்றுவலி, பித்த சுரம், உடல் வெப்பம், வாய் வேக்காடு, வயிற்றுப்புழு ஆகியவற்றை நீக்கும். மாதவிலக்குத் தூண்டல் செய்கையும் உடையது. பூ கருப்பைக் குறை நீக்கியாகவும், பட்டை கோழையகற்றியாகவும், விதை மலமிளக்கி, குடற்பூச்சிக் கொல்லியாகவும் செயற்படும்.

வீக்கம் குறையும்

இலைகள் பேதி மருந்து சிறுநீர்க்கழிவை அதிகரிக்கும், பால் உற்பத்திக்கு நல்லது. மாதவிடாய் போக்கை அதிகப்படுத்தும். தண்ணீர் கட்டிகளுக்கும், மூட்டுவலிக்கும் பற்றாகப் பயன்படும். இலையை வதக்கி இளஞ்சூட்டுடன் வைத்து நாளும் கட்டிவர அரையாப்புக் கட்டி, வீக்கம் கரையும்.

மாதவிலக்கில் கடுமையான வலி இருப்பவர்கள் கல்யாண முருங்கையின் இலைச்சாறு 50 மில்லியை 10 நாள் சாப்பிட வலி தீரும். இதன் இலைச்சாறு 15 மி.லி., ஆமணக்கு நெய் 15 மி.லி. கலந்து இரு வேளை மூன்று நாள் குடிக்க வயிற்றுக் கடுப்பு குணமாகும். இலைச் சாறு 50 மி.லி., தேன் 20 மி.லி. கலந்து சாப்பிட மலக் கிருமிகள் வெளியேறும்.

மலடு நீங்கும்

இதன் இலைச்சாற்றை தினமும் குடித்து வர பெண் மலடு நீங்கி கரு தரிக்கும். நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். உடலும் இளைக்கும். இலையை நறுக்கி, வெங்காயம் போட்டு தேங்காய் நெய் விட்டு வதக்கி 5 முறை சாப்பிட பருவமடையும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்கும்.

கிருமிகள் வெளியேறும்

இலைச் சாறுடன் தேங்காய், மஞ்சள் சேர்த்து அரைத்து மேல் பூச்சாகப் பூசி குளிக்க சொறி, சிரங்கு தீரும். 60 மி.லி. இலைச்சாற்றுடன் 15 கிராம் உப்பு சேர்த்து காலையில் அருந்தினால் பேதியாகும். பேதியில் பூச்சி வெளியேறும்.

கல்யாண முருங்கை இலைச் சாறு 30 மில்லியுடன் பூண்டுச்சாறு 30 மில்லி சேர்த்து அரிசி கஞ்சியில் கலந்து 30 நாள் சாப்பிட ஆஸ்துமா குணமாகும். புலால், புகை, போகம் தவிர்க்கவும்.

இலைச்சாறு 10 மில்லியுடன் வெந்நீர் 10 மில்லி கலந்து குழந்தைகளுக்கு கொடுக்க கீரிப்பூச்சி வெளியேறும். கபம், இருமல் தீரும். ஒரு தேக்கரண்டி மோரில் இலைச்சாற்றினை கலந்து குடிக்க நீர்தாரை அலர்ஜி, நீர் எரிச்சல் தீரும். இலைச்சாற்றில் 5 அரிசி எடை விதைப்பருப்பு, சூரணம் சேர்த்து சாப்பிட குடற் பூச்சிகள் வெளியேறும்.

கண்நோய்க்கு மருந்தாகும் மரப்பட்டை

கல்யாண முருங்கையின் பட்டை மற்றும் இலைகள் மருத்துவ பயன் கொண்டவை. பட்டை துவர்ப்புள்ளது. ஜுரத்தைப் போக்கும், பூச்சிகளை அகற்றும், பாம்புகடிக்கு மருந்தாகும். ஈரல் கோளாறுகளுக்கு, கண் நோய்களுக்கு மருந்தாகப் பயன்படும்.

வயிற்றுக் கடுப்புத் தீர 10 கிராம் மரப்பட்டையை 100 மில்லி பாலில் ஊறவைத்து ஒரு மணிக்கு 20 மில்லி வீதம் கொடுக்க நிற்காத வயிற்றுக் கடுப்பு குணமாகும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -