Posted by : Admin
Tuesday, 30 August 2011
ராஜீவ் கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேரின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்தை அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் ஒருமனதாக ஆமோதித்து நிறைவேற்றினர். தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தீர்மானம் கொண்டு வரப்படுவதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
முதல்வர் ஜெயலலிதா இன்று காலை சட்டசபை கூடியதும் இந்தத் தீர்மானத்தைத் தாக்கல் செய்தார். பின்னர் அவர் பேசுகையில், மூன்று பேருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்படவுள்ளது தமிழக மக்களை பெரும் வேதனையில் ஆழ்த்தியுள்ளது. மக்கள், அரசியல் கட்சிகள், பல்வேறு அமைப்புகள் இந்தத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்ற வேண்டும் என்று கோரி வருகின்றனர். எனவே மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து இந்தத் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு குடியரசுத் தலைவரை இந்த சபை கேட்டுக் கொள்கிறது என்றார். இதையடுத்து அனைத்துக் கட்சிகளின் உறுப்பினர்களும் ஒருமித்த குரலில் தீர்மானத்தை ஆதரித்து அதை நிறைவேற்றினர்.
இந்தத் தீர்மானத்தை குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குடியரசுத் தலைவர் இந்த தீர்மானத்தை ஏற்றால் 3 பேரின் தூக்குத் தண்டனையும் ரத்தாகும் வாய்ப்புள்ளது.முன்னதாக நேற்று சட்டசபையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா, மூவரையும் காப்பாற்றும் அதிகாரம் தனக்கு இல்லை என்று கூறியிருந்தார். மேலும் குடியரசுத் தலைவர்தான் அவர்களைக் காப்பாற்ற முடியும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், தற்போது அதிரடியாக அவர் நிறைவேற்றியுள்ள தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மூவரின் விடுதலைக்காக கடுமையாக போராடி வருவோருக்கு பெரும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது.
Related Posts :
- Back to Home »
- ஆயுள் தண்டனையாக குறைக்கக் கோரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார் ஜெயலலிதா

